கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Saturday, September 29, 2007

கட்டற்ற கொடுமை

உங்களுக்கு கொடுமையாக தோன்றுவது மற்றவருக்கு இனிமையாக தோன்றலாம்.

மற்றவருக்கு கொடுமையாக தோன்றுவது உங்களுக்கு இனிமையாக தோன்றலாம்.

தன்னை உயர்சாதியென கருதிக்கொள்ளும் நண்பன் ஒருவன் எனக்கு இருக்கிறான்.எப்போதுமே கலைஞரை ஒரு அல்பன் என்றே குறிப்பிட்டு பேசுவான்.தான் காதலித்து கரம் பிடித்த மனைவியைப் பற்றி ஒருமுறை என்னிடம் பேசும் போது சாதியில் ஒருபடி தன்னை விட கீழானவள் என்று குறிப்பிட்டு பேசினான்.

கலைஞரை அற்பன் என்று என்று குறிப்பிடும் இவன் அற்பனிலும் அற்பனாக இருக்கின்றானே என்று நினைத்துக் கொண்டேன்.

இவனுடைய பார்வையில் கலைஞர் அற்பமாக தோன்றுகிறார்.கலைஞருடைய பார்வையில் இவன் எப்படி தோற்றமளிப்பான்?கடையனுக்கும் கடையனாகத் தான் தோற்றமளிப்பான்.

இதை ஒரு பின்னூட்டமாக சுப்பையா வாத்தியார் அவர்களின் பதிவிலே இன்று இட்டேன்.இன்னும் வெளியிடவில்லை.அவ்வளவு கொடுமையாகவா இது இருக்கிறது?


Friday, September 28, 2007

கடவுள் நம்பிக்கை

எனக்குத் தெரிந்த ஒரு ஈனப்பிறவி இருக்கிறான்.அவனுடைய மகன் திருமணத்திற்கு பெண் வீட்டார் பத்திரிக்கையின் ப்ரூஃப் கொடுத்து சரி பார்க்க சொல்கிறார்கள்.அங்காள ஈஸ்வரி துணை என்று இருந்ததை அங்காளபரமேஸ்வரி துணை என்று மாற்றினான் அந்த ஆன்மிகவாதி.இவருடைய ஆன்மிகத்தின் தரத்தை என்னவென்று சொல்ல?

இங்கே இவருடைய கடவுள் நம்பிக்கையா வெளிப்படுகிறது?இல்லை,அவருடைய அகந்தையும்,அசட்டு
நம்பிக்கையும் தான் வெளிப்படுகிறது.

பெரும்பாலான கடவுள் பக்தர்களின் நிலை இதுதான்.தாங்கள் நம்புவதைத் தான் கடவுள் என்று நினைத்துக் கொள்கின்றனர்.அதே நேரம் அடுத்தவனின் கடவுளை இவர்கள் கடவுளாகவே மதிப்பதில்லை.

கடவுள் என்பது நம்பிக்கை சார்ந்த விசயம் என்கிறார்கள்.தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதா நம்பிக்கை.உடன்கட்டை ஏறுவது கடவுளுக்குப் பிடித்தமானது என்று நம்பினார்கள்.பெண்களை பொட்டுக் கட்டி விடுவது கூட நல்லது தான் என்று நம்பினார்கள்.இப்போதும் அப்படி நம்பமுடியுமா?.இந்த நம்பிக்கைகளை மாற்றிக்கொண்டதால் இறைவன் நம்மை தண்டித்துவிட்டாரா என்ன?.

கோவில் கூடாது என்பதல்ல;கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடடது என்பது தான் நம் கொள்கை.இப்போது ராமர் பாலம் என்று ஒரு விசயத்தை எடுத்துக்கொண்டு மக்களின் நம்பிக்கையை கேவலப்படுத்திக் கொண்டிருக்கும் கூட்டத்தை கொடியவர்கள் என்பதா?கோமாளிகள் என்பதா?ராமர்பாலம் போன்ற மணல்திட்டுகள் உலகம் முழுவதும் உள்ளன,அங்கெல்லாம் போய் இது ராமர்பாலம் என்று சொல்லமுடியுமா?சொன்னால் பிடித்து பைத்தியக்கார விடுதியிலே அடைத்துவிடுவார்கள்.

நம்பிக்கையா?அறிவா?என்று வரும்பொழுது நான் அறிவின் பக்கம் தான் நிற்பேன் என்று காந்தி சொன்னார்.

சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்கள் இயங்குகின்றன என்பது அறிவு.பூமியைச் சுற்றி சூரியன் முதலான ஒன்பது கோள்கள் இயங்குகின்றன என்பது நம்பிக்கை.இந்த நம்பிக்கையை வளர்த்தெடுப்பது தான் அறிவா?

இந்த மதநம்பிக்கைகளிலிருந்து சிறிது விலகியதாலேயே மேற்கத்தியினர் இன்று உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

மத நம்பிக்கையே ஒருவனை வாழவைக்கும் என்றால் இந்தியா ஏன் இன்னும் ஏழைநாடாக இருக்கிறது?இங்கு இருக்கும் 95% மக்கள் சிறந்த பக்திமான்கள் தான்.

முன்னேறியவர்கள் எல்லாம் தங்களுடைய உழைப்பாலும்,அறிவினாலும்,தன்னம்பிக்கையினாலும் தான் என்பதை உணர்ந்து அதை அடுத்தவர்களுக்கும் போதித்தால் அது ஆக்கபூர்வமாக இருக்கும்.

அதைவிடுத்து அவர்களுக்கு கடவுள் நம்பிக்கையை ஊட்டுவது என்பது அவர்களை தொடர்ந்து மடமையில் வைத்திருக்க செய்யப்படும் கயமைத்தனம் தான்.

Wednesday, September 19, 2007

ஜாலிஜம்பர்: பின் நவீனத்துவம்

ஜாலிஜம்பர்: பின் நவீனத்துவம்
http://vasanthanin.blogspot.com/2007/02/blog-post_4611.html
http://www.postmodernpsychology.com/Philosophical_Systems/Overview.htm

Monday, September 17, 2007

பின் நவீனத்துவம்

எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று(17-செப்-07) மக்கள் தொலைக்காட்சியில் கால்வினோ சிறுகதைகள் என்ற நூலை அறிமுகப் படுத்தி பேசினார்.இத்தாலியரான கால்வினோ மிகச்சிறந்த பின்னவீனத்துவ எழுத்தாளர்களில் ஒருவர் என்றதோடு பின்னவீனத்துவம் என்றால் என்ன என்றும் சிறிது விளக்கினார்.அவர் விளக்கியதன் சிறுகுறிப்பு:1) பின்னவீனத்துவம் ஒரு பொருளை,கருத்தை நேர்க்கோட்டில் விளக்கிச் சொல்லாது.2) ஆசிரியர் ஒரு பொருளைப் பற்றி எழுதுகிறார்.அதை அவருடைய சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்து கொள்கிறார்.வாசகரும் அவ்வாறே அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றபடி புரிந்து கொள்ளலாம்.3) ஒவ்வொருவரும் தனது எண்ணங்களுக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ளமுடியும் என்பதால்,ஆசிரியர் ஒரு படைப்பை வெளியிட்டவுடன் அவருக்கே அதன் மீதான உரிமை போய்விடுகிறது.அந்தப் படைப்பு சமூகத்திற்கானதாகி விடுகிறது.பிரபஞ்சனின் இந்த விளக்கம் , பின்னவீனத்துவ பெருங்கடலில் தவறி விழுந்தவனின் கைக்கு சிக்கிய ஒரு மரக்கட்டையைப் போல் உதவுகிறது.

பின் நவீனத்துவம் பற்றிய எனது புரிதல்:

பின் நவீனத்துவம் என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கிறது.இப்போது உள்ள சூழ்நிலையை பின் நவீனத்துவ காலம் எனலாம்.இதற்கு முந்தைய நிலையை நவீன காலம் என்றும் ,அதற்கு முந்தைய நிலையை முன் நவீன காலம் எனவும் கொள்ளலாம்.

(இந்த சொல்லாடல்கள் எல்லாம் மேற்குலகத்தினருக்கே மிகவும் பொருந்தும்.இந்தியா போன்ற நாடு இன்னும் நவீன காலத்திற்கே வரவில்லை என்று தான் தோன்றுகிறது.)

முன் நவீன காலம் என்பது,மனிதகுலம் தோன்றியதிலிருந்து கி.பி.1600 ஆம் ஆண்டு வரையிலான காலமாக புரிந்து கொள்ளலாம்.மனிதனின் அறிவு வளர்ச்சி மெதுவாக,சீராக இருந்தது.கலை,இலக்கியம்,அறிவியல்,பொருள் உற்பத்தி ஆகியவற்றில் மகத்தான பல சாதனைகள் மனிதனால் படைக்கப் பட்டன.இந்தக் கட்டத்தில் மதமும்,ஆன்மீகமும் மனித சிந்தனைகளை கோலோச்சிக் கொண்டிருந்தது.முன் நவீன காலத்தின் முக்கிய கூறாக மதம்,ஆன்மீகம் இருந்தது,அறிவியல் பூர்வமான அணுகுமுறை அதற்கு அடுத்த இடத்திலேயே இருந்தது.

கலிலியோவிற்கு பின்னால் நவீன காலம் பிறந்தது.பூமி சூரியனை சுற்றுகிறது என்ற உண்மையை சொன்னதற்காக வீட்டுச்சிறை வைத்து கொல்லப்பட்டார்.அதற்குப் பின் அறிவியல் உலகை ஆளத்தொடங்கியது.நவீன காலத்தின் சிறப்பாக அறிவியலை சொல்லலாம்.அப்படியானால் முன் நவீன காலம் வரையிலான மனிதன் அறிவில் குறைந்தவனா,மாபெரும் சாதனைகளை செய்யவில்லையா
என்றால்,அதுவரை செய்யப்பட்ட அனைத்து படைப்புகளையும்,சாதனைகளையும் ஜுஜுபி மேட்டர்
என்று சொல்லும் விதத்தில் இந்த 300,400 ஆண்டுகளில் மனிதன் செய்துவிட்டான்.

(இந்த 300,400 ஆண்டுகளில் இந்தியாவின் பங்கு ஒன்றுமேயில்லை எனலாம்)

நவீன காலத்தில் மார்க்ஸ்,டார்வின் ஆகியோர் ஆளுமை செய்தனர்.
மேலும் ஆடம் ஸ்மித்,பேக்கன்,நியூட்டன்,ஹெகல்,காண்ட் போன்ற அறிவியல்,தத்துவ ஞானிகளும் பெரும் பங்காற்றியுள்ளனர்.

இந்த நவீன காலம் இன்றும் நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது.ஆனால் காதல் படத்தில் சான்ஸ் கேட்டு வருகிறவனிடம்,உன்னிடம் இருந்து இன்னும்,இன்னும் எதிர்பார்க்கிறேன் என்று ஒருவர் கூறுவாரே அதைப்போன்று நவீன சிந்தனைகள் போதாது இன்னும்,இன்னும் மேலே போக வேண்டுமென்று சில அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.இத்தகைய அறிஞர்களிலும் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் பலர் இருக்கிறார்கள்.நவீனத்துவத்தையே முற்றிலும் மறுத்து புதியபாதையில் செல்பவர்,
மற்றும் நவீனத்துவத்தையே வளர்த்து அதனுடைய நீட்சியாக,அதனுடைய அடுத்த கட்டமாக கருதி
செயல்படுபவர்களும் இருக்கிறார்கள்.இந்த இரு வகையினருமே பின் நவீனத்துவ அறிஞர்கள் எனலாம்.

பின் நவீனத்துவம் என்பது கலை,இலக்கியம்,அறிவியல் என அனைத்து துறைகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.தமிழுலகில் எழுத்துத் துறையில் மட்டும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது.

பி.கு:
இந்தியா இன்னும் நவீன சிந்தனைகளையே ஏற்றுக்கொள்ளவில்லை.ராமர் பாலம் கட்டினார் என்று ஒரு கூட்டம் சொல்வதும் ,அதை மந்தைக்கூட்டம் மண்டையையாட்டி வரவேற்பதும் கேவலமாக உள்ளது.நவீன சிந்தனைகளை படைப்பதும்,பரப்புவதும் நம்முன் இருக்கும் அவசியத் தேவைகள்.

Saturday, September 15, 2007

சன் டிவிக்கு சனி பிடித்து விட்டது.

காலையில் விழித்ததே கலைஞர் டிவியில் தான்.செய்திகள் 7.30 மணிக்கு வழங்குகின்றனர்.ஒலி,ஒளியின் தரம் சன் டிவிக்கு சமமாக உள்ளது.கலைஞர் பெயரை சொல்லும் இடங்களில் முதல்வர் கலைஞர் என்று குறிப்பிடுகின்றனர்.முதல்வர் கலைஞர் கருணாநிதி என்று குறிப்பிடுவதால் என்ன நட்டம் வந்துவிடப் போகிறது என்று தெரியவில்லை.

அடுத்து கமல் பேட்டி.அவரைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது .ஆர்ப்பாட்டமில்லாத அவருடைய பண்பினைப் பார்த்து ஆச்சரியப் படாமல் இருக்க முடியவில்லை.

அடுத்து இளையராஜாவின் நிகழ்ச்சி.பாடகர்கள் செய்யும் நுண்ணிய பிழைகளை சரியாகக் கண்டுபிடித்து அதை திருத்துகிறார்.ஒலகம் என்று பாடவேண்டியதை வொலகம் என்று பாடுகிறார் பாடகர்.அதை இளையராஜா, v என்று தொடங்காது,o என்று தொடங்கும் என்று திருத்துகிறார்.தமிழ் மொழியின் மீதும்,இசையின் மீதும் உள்ள ஆழ்ந்த ஈடுபாடு தான் அவரை வேறு மொழிகளில் இசையமைக்க விடாமல் தடுக்கிறது.

அடுத்து லியோனி வந்தார்.அண்ணாவின் பிறந்த நாளான இன்று அண்ணாவின் மேற்கோளுடன் தனது உரையைத் தொடங்கினார்.

மூவருமே விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் எல்லாம் சொல்லவில்லை.மொத்தத்தில் கலைஞர் டி.வி விநாயகர் சதுர்த்தியை கண்டுகொள்ளவில்லை.

கலைஞர் டி.வி மைக்டைசனைப் போல் களம் இறங்கியுள்ளது.சன் டி.விக்கு இனி போதாத காலம் தான்.

Saturday, September 8, 2007

tamil baby names

அன்பு தமிழ் நெஞ்சங்களே இந்த சுட்டியில் சென்று பாருங்கள்.
http://www.nithiththurai.com/name/index1.html

தமிழ் குழந்தை பெயர்கள்

அன்பு தமிழ் நெஞ்சங்களே இந்த சுட்டியில் சென்று பாருங்கள்.
http://www.nithiththurai.com/name/index1.html

இட ஒதுக்கீடு பற்றி கனிமொழி

ஊடகங்கள் இட ஒதுக்கீட்டை ஒரு சமூகத் தீமை ஆக்கிவிட்டன.சமீபத்தில் வடசென்னையில் ஒரு பள்ளியின் 20 ஆசிரியர்களைச் சந்தித்து அவர்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனையோ மேல்தட்டுப் பள்ளிகளின் ஆசிரியர்களை விட அவர்கள் மாணவர்களிடமும் சமூகத்திடமும் கரிசனம் அதிகம் உடையவர்களாக இருந்தார்கள்.

அதிலும் அங்கு இருந்த ஆசிரியைகளிடமிருந்த தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் அவர்களை நிமிர்ந்து பார்க்கவைத்தன.

இத்தனை இருந்தும் அவர்கள் அனைவரும் சமூக நீதி என்று வரும்போது ஒருமித்த கருத்தினைக் கொண்டிருந்தனர்: இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுக் காலம் ஆகியும் இன்னும் ஏன் இந்த இட ஒதுக்கீடு? சட்டத்தின் முன் எல்லோருக்கும் சம உரிமையும் சம வாய்ப்பும் தரப்பட வேண்டும். அப்படி இருக்கும்போது சிலருக்கு மட்டும் சில சலுகைகள் அளிக்கப்படுவது எப்படி நியாயமாகும்? முன் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதால் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று எங்களது வாய்ப்புகளைத் தட்டிப் பறிப்பது எப்படி நியாயமாகும்? இப்படி இட ஒதுக்கீடு செய்து அந்தச் சலுகையின் மூலம் வாய்ப்பு பெறும் ஒரு மாணவனிடம், அல்லது வேலையாளிடம் எப்படித் தகுதியை எதிர்பார்க்க முடியும்?

இவர்களை மட்டுமின்றி படித்த மத்திய தர மற்றும் மேட்டுக் குடியினரை அலைக்கழிக்கும் இந்தக் கேள்விகள் அவர்களை அறியாமல் அவர்களுக்குள் கோபத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் உருவாக்கியிருக்கின்றன.
நான் சந்திக்கும் பல கல்லூரி மாணவர்களிடம் இதே கோபத்தைக் காண முடிகிறது. இந்த மாணவர்களில் பலருக்கு இந்தியா ஓர் ஏழை நாடு என்பதைத் தவிர தங்களைச் சுற்றியுள்ள சமூகத்தின் நிதர்சனங்கள் எதுவும் தெரியாது. ஆனால் தங்கள் வாய்ப்பும் எதிர்காலமும் தட்டிப் பறிக்கப்படுவதாக அவர்களுக்குள் ஊட்டப்பட்டிருக்கும் தீ கவலைக்குரியது.

உண்மையில் விசாரித்துப் பார்த்தால் மேல் ஜாதியினருக்கும் பிற்படுத்தப்பட்ட ஜாதி, தலித் மாணவர்களுக்கும் அதிகம் மதிப்பெண்களிலோ தகுதிகளிலோ வித்தியாசம் இருப்பதில்லை. ஆனால் அப்படிப்பட்ட பிரமை மக்களிடையே மிக சாமர்த்தியமாக உருவாக்கப்பட்டிருக்குகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் செலுத்தப்பட்டுவரும் ஒரு ஆதிக்கத்தை 50 ஆண்டுகள், அதுவும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் சீர்செய்துவிட முடியும் என்பது அதீத எதிர்பார்ப்பு. அதுவும் அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை வாழும் வசதிகளையும் தரமான கல்வி வாய்ப்புகளையும் உருவாக்காத சூழ்நிலையில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்தவித நியாயமும் இருக்க முடியாது. எல்லாவற்றையும் விட இட ஒதுக்கீட்டால் பயன்பெறும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் கூட ஏதோ தங்களது வாய்ப்புகள் தலித் மக்களால் தட்டிப் பறிக்கப்படுவதாகப் புலம்புகிறார்கள்.

சினிமா, பத்திரிகைகள் போன்ற வெகுஜன ஊடகங்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்துகளை மிக சாமர்த்தியமாகப் பரப்பிவருகின்றன.

'ஓரே ஒரு கிராமத்திலே' என்ற படம் பத்திரிகைகளில், அதுவும் பொதுவாகத் தமிழைக் கண்டுகொள்ளாத ஆங்கிலப் பத்திரிகைகளால் கொண்டாடப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது. சங்கரின் 'ஜென்டில்மேன்' என்ற வெற்றி விழாப் படம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கோஷத்தோடுதான் தொடங்குகிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள்மீது சமூகம் கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறையும் வன்முறையும் எப்பொழுதாவது நடைபெறும் அத்துமீறல்களாகவே பார்க்கப்படுகின்றன. இப்படிச் சமூகத்தின் ஒரு முக்கியமான சிக்கலை விடுவிக்கவோ தெளிவுபடுத்திச் சீர்செய்யவோ ஊடகங்களும் அரசியல் இயக்கங்களும் முன் வராதது வியப்பளிக்கிறது. சமூகச் சீர்திருத்தங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல் அவற்றைப் பெரிதாக்குவதா அறிவுஜீவித்தனம்?

Friday, September 7, 2007

1990 ல் தி.மு.க அரசு நீக்கப்பட்டது ஏன்?

வெறும் 50 எம்.பி க்களை வைத்துக்கொண்டு இந்தியாவை ஆள நினைத்த சந்திரசேகர்,ஆட்சி செய்த 6 மாதங்களில்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை டிஸ்மிஸ் செய்யத் துணிந்தார்.அந்த அயோக்கியத்தனத்துக்கு துணைபோனவர் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன்.

தி.மு.க மீதும்,கலைஞர் மீதும் அப்படி என்ன கோபம் அவருக்கு?

காமராஜர் முதல்வராக இருந்த போது சட்டசபையில் நடந்த ஒரு நிகழ்ச்சி.எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர் ஆசைத்தம்பி எழுந்து ஒரு விரலைக்காட்டி பேசுவதற்கு அனுமதி கேட்டிருக்கிறார்.உடனே அப்போதைய நிதி அமைச்சரான ஆர்.வெங்கட்ராமன் எழுந்து உறுப்பினருக்கு அவசரம் என்றால் வெளியே போக வேண்டியது தானே என்று ஜோக் அடித்திருக்கிறார்.உடனே கலைஞர் எழுந்து ஆசைத்தம்பிக்கு அவசரம் என்றால் இவர் ஏன் வாயைத்திறக்கிறார் என்று கேட்டவுடன் சபையே கொல்லென்று சிரித்து அடங்கியதாம்.

கலைஞரிடம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட ஆர்.வி சமயம் பார்த்து கழுத்தை அறுத்திருக்கிறார்.

இப்போது இந்த ஆள் இருக்கிறாரா,போய்ச் சேர்ந்து விட்டாரா என்று தெரியவில்லை.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்