நான்கு சாலைகள் சந்திக்கும் பரபரப்பான சந்திப்பின் ஒரு ஓரத்தில் நின்று பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த போது காலை மணி 12.
வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் அந்தச்சாலையின் ஓரத்தில் டெலிபோன் வேலைகளுக்காக பள்ளம் தோண்டும் பணியில் ஆட்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.அவர்களில் ஒருவருடைய மனைவி கைக்குழந்தை ஒன்று,மூன்று வயதுப் பெண்குழந்தை ஒன்று சகிதமாக ஓரமாக உட்கார்ந்திருந்தார்.தோண்டிப்போடப்பட்ட மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தது அந்த மூன்று வயதுக் குழந்தை.என் மகளைப் போலவே நடுவகிடு எடுத்து ,ரெட்டைக்குடுமி போட்டு இருந்த அக்குழந்தையின் மீது ஒரு ஈர்ப்பு உருவாகி, வேதனையுடன் இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். "விற்பதற்கு உடலைத்தவிர வேறு ஒன்றும் இல்லாத பாட்டாளிகள்." பேராசான் காரல் மார்க்சின் சிந்தனைகள் மூளைக்குள் அலையடித்துக் கொண்டிருந்தது.
வேலை முடிந்து மீண்டும் மண்ணை அள்ளி உள்ளே போட ஆரம்பித்த போது அந்தக் குழந்தை செய்த வேலை தான் என்னை அழ வைத்து விட்டது.தன் பங்குக்கு அதுவும் ஒரு சிறு மண்வெட்டியை எடுத்து மண்ணை அள்ளிப் போட ஆரம்பித்துவிட்டது.என் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.அந்த இடத்தை விட்டு உடனே அகன்றுவிட்டேன்.
ஏழையின் வீட்டில் பிறந்ததால் மூன்று வயதிலேயே அக்குழந்தை வெயிலில் இறங்கி வேலை செய்து பழக ஆரம்பித்து விட்டது.அதைப் போன்ற குழந்தைகளில் ஒரு 10 சவீதமாவது நன்கு படித்து ஒரு உயர்ந்த நிலைக்கு வரமுடியுமா என்பது சந்தேகமே.
அவர்கள் மீது ஏற்பட்டது பரிதாப உணர்ச்சி அல்ல, உலகின் கொடுரமான சூழ்நிலைகளில் ஒன்றை நேரில் பார்த்ததால் ஏற்பட்ட பய உணர்ச்சியாகக் கூட இருக்கலாம்.
வீட்டிற்கு வந்து மனைவியிடம் சொன்னேன்.என்னை உர்ரென்று பார்த்தார்.ஊருல உள்ளவுகளுக்கெல்லாம் இரக்கப்படுங்க, எங்களையெல்லாம் பார்த்தா மனுசனா தெரியாது என்ற தொனியில் பார்வை இருந்தது.
நெஞ்சை அழுத்தும் எத்தனையோ சம்பவங்களை காலப்போக்கில் நாம் மறந்துவிடுவோம். ஆனால் என்றென்றும் இச்சம்பவத்தை மறக்க முடியாதபடி இளவஞ்சி எடுத்த போட்டோ அமைந்துவிட்டது.