கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Thursday, November 29, 2007

உலகின் புதிய பாட்டாளிகள்


நான்கு சாலைகள் சந்திக்கும் பரபரப்பான சந்திப்பின் ஒரு ஓரத்தில் நின்று பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த போது காலை மணி 12.


வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் அந்தச்சாலையின் ஓரத்தில் டெலிபோன் வேலைகளுக்காக பள்ளம் தோண்டும் பணியில் ஆட்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.அவர்களில் ஒருவருடைய மனைவி கைக்குழந்தை ஒன்று,மூன்று வயதுப் பெண்குழந்தை ஒன்று சகிதமாக ஓரமாக உட்கார்ந்திருந்தார்.தோண்டிப்போடப்பட்ட மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தது அந்த மூன்று வயதுக் குழந்தை.என் மகளைப் போலவே நடுவகிடு எடுத்து ,ரெட்டைக்குடுமி போட்டு இருந்த அக்குழந்தையின் மீது ஒரு ஈர்ப்பு உருவாகி, வேதனையுடன் இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். "விற்பதற்கு உடலைத்தவிர வேறு ஒன்றும் இல்லாத பாட்டாளிகள்." பேராசான் காரல் மார்க்சின் சிந்தனைகள் மூளைக்குள் அலையடித்துக் கொண்டிருந்தது.



வேலை முடிந்து மீண்டும் மண்ணை அள்ளி உள்ளே போட ஆரம்பித்த போது அந்தக் குழந்தை செய்த வேலை தான் என்னை அழ வைத்து விட்டது.தன் பங்குக்கு அதுவும் ஒரு சிறு மண்வெட்டியை எடுத்து மண்ணை அள்ளிப் போட ஆரம்பித்துவிட்டது.என் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.அந்த இடத்தை விட்டு உடனே அகன்றுவிட்டேன்.

ஏழையின் வீட்டில் பிறந்ததால் மூன்று வயதிலேயே அக்குழந்தை வெயிலில் இறங்கி வேலை செய்து பழக ஆரம்பித்து விட்டது.அதைப் போன்ற குழந்தைகளில் ஒரு 10 சவீதமாவது நன்கு படித்து ஒரு உயர்ந்த நிலைக்கு வரமுடியுமா என்பது சந்தேகமே.


அவர்கள் மீது ஏற்பட்டது பரிதாப உணர்ச்சி அல்ல, உலகின் கொடுரமான சூழ்நிலைகளில் ஒன்றை நேரில் பார்த்ததால் ஏற்பட்ட பய உணர்ச்சியாகக் கூட இருக்கலாம்.


வீட்டிற்கு வந்து மனைவியிடம் சொன்னேன்.என்னை உர்ரென்று பார்த்தார்.ஊருல உள்ளவுகளுக்கெல்லாம் இரக்கப்படுங்க, எங்களையெல்லாம் பார்த்தா மனுசனா தெரியாது என்ற தொனியில் பார்வை இருந்தது.


நெஞ்சை அழுத்தும் எத்தனையோ சம்பவங்களை காலப்போக்கில் நாம் மறந்துவிடுவோம். ஆனால் என்றென்றும் இச்சம்பவத்தை மறக்க முடியாதபடி இளவஞ்சி எடுத்த போட்டோ அமைந்துவிட்டது.

4 comments:

said...

ஜாலிஜம்பர்,

வழக்கம்போலவே அவசரத்தில் சொல்லவந்ததை தெளிவாகச் சொல்லாமல் கோட்டை விட்டுவிட்டேன் போல! :(

நமக்கான வசதிவாய்ப்புகளின் படியும் நம் வளமான வாழ்வுக்கு சிறந்தவைகளாகவும் அத்தியாவசியமானவைகளாகவும் நினைக்கும் அளவுகோள்களின் கீழாக உள்ளவர்களை பார்த்து நாம் பரிதாபப்படுகிறோமோ என்ற எண்ணத்தில் சொல்லியது. சற்றே உற்றுக் கவணித்தால் நாமும் அவர்களும் அம்பாணிகளும் பணத்தின் பின்னால்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஒரு தாயாக ஒரு பெண் அவள் குழந்தை எல்லா வசதி வாய்ப்புகளுடன் வாழவேண்டுமென ஆசைப்படலாம். ஆனால் யாராவது அவள் குழந்தையை சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பதாக நினைத்து பரிதாபப்படுவதையும், இரக்கப்பட்டு விசனப்படுவதையும் விரும்பமாட்டாள் என்றே நினைக்கிறேன். இல்லாதவர்களுக்கு உதவுவது வேறு. அவர்கள் இல்லாமல் இருப்பதாலேயே உலகம் அவர்கள் மீது கழிவிரக்கம் சுமத்தி அதன் மூலம் தன் சுய இரக்க குணத்திற்கு வடிகால் தேடுவது என்பது தேவையில்லாதது என்பதுவும் அது அவர்களது சுயமரியாதையை பாதிக்கக்கூடும் என்பதுமே எனது கருத்து.

ஏழைகளுக்கு செய்யும் உதவிகளைகூட பெறுபவரின் கவுரவும் பாதிக்கப்படாதவாறு கொடுக்கவேண்டும் என்பது என் எண்ணம். நாலு பேருக்கு உதவுகிறோம் என்ன கர்வத்தையும், உதவும் நம் நல்ல எண்ணத்தையும் விட பெறுபவரின் சுயமரியாதை பாதிக்கப்படாமல் செய்கிறோமா என்பது முக்கியமல்லவா?

ஏதேனும் தவறிருப்பின் சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன்.

said...

//நமக்கான வசதிவாய்ப்புகளின் படியும் நம் வளமான வாழ்வுக்கு சிறந்தவைகளாகவும் அத்தியாவசியமானவைகளாகவும் நினைக்கும் அளவுகோள்களின் கீழாக உள்ளவர்களை பார்த்து நாம் பரிதாபப்படுகிறோமோ என்ற எண்ணத்தில் சொல்லியது.//

நல்ல கருத்து.



//ஒரு தாயாக ஒரு பெண் அவள் குழந்தை எல்லா வசதி வாய்ப்புகளுடன் வாழவேண்டுமென ஆசைப்படலாம். ஆனால் யாராவது அவள் குழந்தையை சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பதாக நினைத்து பரிதாபப்படுவதையும், இரக்கப்பட்டு விசனப்படுவதையும் விரும்பமாட்டாள் என்றே நினைக்கிறேன்.//

நிச்சயமாக.நானும் அவ்வாறு தான் நினைக்கிறேன்.

//இல்லாதவர்களுக்கு உதவுவது வேறு. அவர்கள் இல்லாமல் இருப்பதாலேயே உலகம் அவர்கள் மீது கழிவிரக்கம் சுமத்தி அதன் மூலம் தன் சுய இரக்க குணத்திற்கு வடிகால் தேடுவது என்பது தேவையில்லாதது என்பதுவும் அது அவர்களது சுயமரியாதையை பாதிக்கக்கூடும் என்பதுமே எனது கருத்து.//

உங்கள் கருத்து மிகவும் சரி.நீங்கள் பதிவிடுவதற்கு முதல்நாள் தான் நான் குறிப்பிட்ட காட்சியைப் பார்த்திருந்தேன்.அந்தக் குழந்தைக்கு கைநிறைய சாக்லேட் வாங்கிக்கொடுக்க வேண்டும் என தோன்றிய எண்ணத்தை புறந்தள்ளி விட்டு சென்றுவிட்டேன்.

//ஏழைகளுக்கு செய்யும் உதவிகளைகூட பெறுபவரின் கவுரவும் பாதிக்கப்படாதவாறு கொடுக்கவேண்டும் என்பது என் எண்ணம். நாலு பேருக்கு உதவுகிறோம் என்ன கர்வத்தையும், உதவும் நம் நல்ல எண்ணத்தையும் விட பெறுபவரின் சுயமரியாதை பாதிக்கப்படாமல் செய்கிறோமா என்பது முக்கியமல்லவா?

ஏதேனும் தவறிருப்பின் சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன்.//

உங்கள் எண்ணம் தான் என்னுடைய எண்ணமும்.

said...

இப்படிப்பட்ட குழந்தைகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால் நம் நாட்டில் எத்தனை இருக்குமோ? என்று சிந்திக்க வைத்தது உங்கள் பதிவு..

said...

வாங்க பாசமலர்,
பணக்காரர்களின் நலனை பாதுகாக்கத் தான் அரசாங்கம்,இப்படிப்பட்டவர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.:-((

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்