சிறுபான்மை முஸ்லிம்களை எதிர்த்து அரசியல்
செய்யும் மோதியும் , சிறுபான்மை பார்ப்பனர்களை எதிர்த்து அரசியல் செய்யும் கலைஞரும் ஒன்று தானா?
தங்களுடைய ஆதாயத்துக்காக இல்லாத ஒன்றை உருவாக்கி அதற்கு கண் , காது ஒட்டவைத்து ஈறைப் பேனாக்கி,பேனைப் பெருமாளாக்கி அதை வைத்து அரசியல் செய்வது உலகம் முழுவதுமுள்ள
அரசியல் , ஆதிக்கவெறியர்களின் வேலை தான்.
ஆனால் பிஜேபியின் கேடுகெட்ட அரசியல் வி.பி.சிங் தலைமையிலான மாபெரும் எழுச்சியை சகிக்க முடியாமல் ஆரம்பமானது.இந்து,சந்து என்று முழக்கமிடும் பி.ஜே.பி அதே இந்துக்களின் நலன் காக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்துவதை தடுக்கும் நோக்கிலேயே ராமர் கோயில் பிரச்சினையைக் கையில் எடுத்தது.
அவர்களே அப்போது நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் இப்படியொரு ஆதரவை இந்திய மக்கள் தருவார்கள் என்று.சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் கடன் வாங்கி காவடி தூக்கும் மக்கள் நிறைந்த இந்தியாவில் அவர்களுக்கும் இடம் கிடைத்தது.
முஸ்லிம் என்ற ஒரு பொது எதிரியை உருவாக்கி இந்து வெறியை வென்றெடுத்துள்ளது பி.ஜே.பி.
இதற்காக அவ்வப்போது முஸ்லிம்கள் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.அதிகம் பலி கொடுத்தால் அதிகம் பலன் கிடைக்கும். இதை நன்றாகவே புரிந்து கொண்டார் மோதி.
இந்த கேவல அரசியலுக்கும் கலைஞருக்கும் முடிச்சுப் போடுகின்றனர் சில கேவல பிறவிகள்.தமிழ்நாட்டில் இதுவரை எந்த பிராமணரும் கொல்லப்பட்டதில்லை.அவர்களுடைய தத்துவங்களையும்,கோட்பாடுகளையும் கொள்கையளவில் தான் கலைஞர் எதிர்க்கிறாரே தவிர வன்முறையை என்றும் கையில் எடுத்ததில்லை.
ஆரிய எதிர்ப்பு அரசியல் செய்ய வேண்டிய தேவையும் ஆரியர்களாலேயே உருவானது.இனவெறியையும்,சாதிவெறியையும் அப்பட்டமாக கடைப்பிடித்துக் கொண்டிருந்த அந்தக்காலத்தில் திராவிட இயக்க அரசியலின் தோற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.
இன்னும் ஆரிய எதிர் அரசியலின் தேவை முடியவில்லை.சாதி,இன ரீதியாக தங்களை உயர்ந்தவர் என்று பறைசாற்றுவதில் பிராமணர்கள்
தான் இன்றும் முதலிடத்தில் இருக்கிறார்கள்.
பிராமணர்களை முதலிடத்தில் இருந்து வெளியேற்றியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.இந்த விழிப்புணர்வு மற்ற இடங்களுக்கும் மெதுவாகப் பரவிக் கொண்டிருக்கிறது.அதை முறியடிக்கும் முயற்சி தான் இந்து வெறியர்களால் பரப்பப்படும் முஸ்லிம் எதிர்ப்புணர்வு பிரச்சாரம்.
மோதி தன்னுடைய பொருளாதாரத் தத்துவங்களால் தான் வெற்றி பெற்றார் என்று சொல்வது முட்டாள்தனமானது.லாலுவின் ஆட்சியில்
தான் பீகார் காட்டுமிராண்டி தேசமானது என்று பரப்பப்படும் விஷமப் பிரச்சாரம் போன்றது தான் மோதி ஆட்சியில் குஜராத் வளர்ந்து
விட்டது என்ற பிரச்சாரமும்.நீண்ட நெடுங்காலமாகவே குஜராத்திகள் வணிகத்திலும்,பொருள் உற்பத்தியிலும் சிறந்து விளங்கியவர்கள் தான்.
மோதி பெற்றுள்ள வெற்றி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் கல்லறைகளின் மேல் கட்டப்பட்ட வெற்றி.
எனவே மோதியின் அரசியலையும்,கலைஞரின் அரசியலையும் ஒப்பிடுபவன் ஒரு பைத்தியமாகத் தான் இருக்க முடியும்.