கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Wednesday, August 22, 2007

நிஜமாகிவிட்ட தஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள்

மாபெரும் தாக்கத்தை எனக்கு ஏற்படுத்திய படைப்புகளுள் ஒன்று தஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள்.காதல் ஒரு சுனாமியாய் என்னை சுருட்டிக்கொண்டு போகவிருந்தபொழுது என்னைக் காப்பாற்றியது இப்புத்தகம்.



கதையின் நாயகி,உயிரினும் மேலாக தன் காதலனைக் காதலிக்கிறாள்.தன் பணியின் காரணமாக சிறிது நாள் வேறிடம் செல்ல நேர்கிறது நாயகனுக்கு.மனமின்றி பிரிகிறான்,எப்படியும் விரைந்து திரும்புவேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு .



பிரிவின் வலியை தாங்காமல் தவிக்கிறாள் நாயகி.இச்சூழ்நிலையில் தற்செயலாக ஒருவனை சந்திக்கிறாள்.அவனுடன் பழகிய சில காலங்களிலேயே அவனிடமும் மனதைப் பறிகொடுத்து விடுகிறாள்.



முன்னர் காதலித்தவன் வரமாட்டான் என்றெண்ணி புதியவனிடம் சேர்ந்து வாழத் துணிந்து விடுகிறாள்.



இந்நேரத்தில் விதி விளையாடுகிறது.பழைய காதலன் வந்துவிடுகிறான்.அவனைப் பார்த்தவுடன் குழப்பமடைகிறாள்.இறுதியில் புதிய காதலனைக் கைவிட்டு விட்டு, பழைய காதலனுடன் ஓடோடிச்சென்று சேர்ந்து கொண்டு,புதியவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறாள்.



தலையில் இடி விழுந்ததைப் போல கலங்கிப்போன புதிய காதலனின் வார்த்தைகள் மூலம் காதலுக்கு புதிய இலக்கணத்தைப் படைக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.



இப்போது விசயத்திற்கு வருவோம்.சென்னையில் நடந்த சம்பவம் ஒன்று இன்றைய தினமலரில் வந்துள்ளது.கணினித்துறையில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் பல வருடங்களாக ஒருவரைக் காதலித்து பதிவுத் திருமணமும் செய்துள்ளார்.திருமணம் முடிந்தவுடன் கணவர் வெளிநாடு சென்று விட்டார்.



இரண்டு வருடங்களாக தனிமையின் கொடுமையில் இருந்த பெண் இன்னொரு ஆணுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து விட்டார்.



இப்போது வெளிநாட்டில் இருந்தவர் வந்துவிட்டார்.ஆனால் பெண்ணோ,புதிய காதலருடன் உள்ளார்.விசயம் காவல்துறை வரை சென்று விட்டது.காவலர் இருவரையும் அழைத்து விசாரித்துள்ளனர்.



இளம்பெண் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறார்.இன்னும் இரண்டு நாட்களில் தன் முடிவை தெரிவிக்கிறேன் என்று சொல்லி வீடு திரும்பியுள்ளார்.



காதல் மனிதனை என்ன பாடு படுத்துகிறது என்று பாருங்கள்.

அப்பெண் என்ன முடிவு எடுக்கப் போகிறார்?ஆவலுடன் காத்திருக்கிறேன்.

http://www.dinamalar.com/2007aug22/events_tn3.asp

7 comments:

said...

ரெம்ப அபத்தமாக இருக்கிறது ஒப்பீடு. வெண்ணிற இரவுகளை பலமுறை வாசித்தவன் என்ற முறையிலும் நேசித்தவன் என்ற முறையிலும் சொல்கிறேன். வெண்ணிற இரவு நாயகி தாலியை மறைத்துக்கொண்டு இன்னொருவனை காதலிக்கவில்லை. நுட்பமான அந்த உணர்வுப் போராட்டத்தை இந்த செய்தியோடு சேர்த்து கொச்சைப்படுத்தாதீர்கள்

said...

முத்துக்குமரன்,அந்தச் செய்தி வழக்கமான கள்ளக்காதலாக எனக்குத் தோன்றாததினாலேயே இப்படி தொடர்புபடுத்தினேன்.

இருந்தாலும் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

said...

முத்துக்குமரனின் வாதம் சரியே,

நீங்கள் ஏதே வடமொழிப் படத்தை பார்த்துவிட்டு இப்படி எழுதி இருக்கவேண்டும்.

வெ.இ முடிவை நினைத்தால் இப்பொழுதும் சிலிர்க்கிறது விழியோரத்துளியால்.

said...

//வெ.இ முடிவை நினைத்தால் இப்பொழுதும் சிலிர்க்கிறது விழியோரத்துளியால். //

இசை,நிஜமாகவே எனக்கும் இதே உணர்வு தான் இருக்கிறது.

தஸ்தயேவ்ஸ்கியைப் பற்றி எழுதி,அதற்கு வந்த இரண்டு பின்னூட்டங்களும் என்னைக் கடிந்து கொண்டதைப் பார்க்கும் போது அவரின் மீதான வாசகர்களின் மதிப்பை உணரமுடிகிறது.

said...

நான் ஆர்வமுடன் எதிர்நோக்கிய இப்பிரச்சினையின் முடிவு தெரிந்துவிட்டது.அந்தப் பெண் தான் முதலாவதாக காதலித்தவரையே கணவராக ஏற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.
http://www.dinamalar.com/2007aug23/events_tn1.asp

said...

வெண்ணிற இரவுகளைப் பற்றி எழுதவேண்டும் என்று நீண்டநாட்களாய் நினைத்துக் கொண்டிருந்தேன். நுட்பமான உணர்வுகளைச் சர்வசாதாரணமாக வெளிப்படுத்திக்கொண்டு போவன தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்துகள் (மொழிபெயர்ப்பாளருக்குச் சபாஷ்). அவரது அப்பாவியின் கனவைப்பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதினது இங்கே: http://agaramuthala.blogspot.com/2005/12/fyodor-dostoevsky.html

பதிவுக்கு நன்றி.

said...

//வெண்ணிற இரவுகளைப் பற்றி எழுதவேண்டும் என்று நீண்டநாட்களாய் நினைத்துக் கொண்டிருந்தேன்.//

உடனடியாக அதை செயல்படுத்துங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

//(மொழிபெயர்ப்பாளருக்குச் சபாஷ்)//

ஆமாம்.தூய தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தி அவர்கள் கதையை விவரிக்கும் விதம் அருமையானது.

வருகைக்கு நன்றி சுந்தர்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்