கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Friday, June 29, 2007

என் வாழ்வில் எட்டு சம்பவங்கள்

பதிவு ஒன்று இடுவதற்கு ஐடியாவையும்,வாய்ப்பையும் கொடுத்த தருமி ஐயாவுக்கு நன்றியையும்,எட்டு என்றாலே ஆகாது என்று எகிறி ஓடும் சமுதாயத்தில் எட்டாட்டம் ஆரம்பித்த புரட்சி வீரனுக்கு வணக்கத்தையும் செலுத்திவிட்டு என் எட்டை எடுத்து வைக்கிறேன்.

1.அப்போது எட்டு வயது இருக்கும்.பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் என்னை ரகசியமாக அவ்வீட்டார் அழைத்துச் சென்றனர்.அவர்கள் வீட்டில் ஒரு பானை காணாமல் போய் விட்டது.அதை கண்டுபிடிக்கத்தான் என்னை அழைத்திருந்தனர்.வீட்டினுள் சென்று கதவு,ஜன்னல் எல்லாம் மூடி லைட் அணைத்து இருட்டாக்கி , ஒரு குத்து விளக்கை ஏற்றி என்னை அமர வைத்தனர். பின் ஒரு வெற்றிலையில் மையைத் தடவி அதில் பானை தெரிகிறதா என்று பார்க்க சொன்னார்கள்.நானும் உற்று உற்றுப் பார்த்து விட்டு ஒன்றும் தெரியவில்லை என்று சொல்லி விட்டேன்.

இவனுக்கு தெய்வசக்தி இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

2.ஆறாம் வகுப்பு படிக்கும் போது தமிழ் அய்யா சாதிக்கொடுமையை பற்றி அழகாக விளக்கினார்.பாடத்தில் இல்லாத ,வாழ்க்கைக்குத் தேவையான பொதுவான விசயங்களை பேசும் ஆசிரியர்கள் வெகு சிலரே.ஒருவனை தாழ்ந்த சாதி என்று கேவலப்படுத்தினால் இன்னொருவனிடம் சாமி என்று காலில் விழ நேரிடும் என்று அவர் போதித்தது மண்டையில் வலுவாக ஏறி விட்டது.

3.ஒன்பது,பத்தாம் வகுப்புகளில் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு மரத்தடி பிள்ளையார் கோவில் இருந்தது.தேர்வு சமயங்களில் கோவிலை கடக்கும் போது நண்பர்கள் திடீரென நின்று அதைச் சுற்றி வணங்குவார்கள்.
நாம் தேர்வு எழுதுவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று சிந்திப்பேன்.

4.கல்லூரியில் சேர்ந்தவுடன் துறைத்தலைவி சொன்னார் "பூவை எட்ட நின்று ரசி.பறித்து ரசிக்க என்ணாதே" என்று.அவர் சொன்னது பெண்களைப் பற்றி.

5.1992 ஜெ பதவிக்கு வந்து சில மாதங்களே ஆகியுள்ளது.எங்கள் தமிழ் அய்யாவிடம் கேட்டேன் "ஏன் இந்த அம்மா இந்த ஆட்டம் போடுகிறார்" என்று.அதற்கு அவர் உடனே சொன்ன பதில்"என்னப்பா செய்யுறது?அந்தம்மாவுக்கு ஒரு மூக்கணாங்கயிறு யாரும் மாட்டலையே".அவர் திருமணத்தைத் தான் அப்படிச் சொன்னார்.திருமணம் பெண்களை எப்படி அடிமையாக்குகிறது என்று புரிந்து கொண்டேன்.
(அந்தத் தமிழ் ஐயா இன்று ஜெயா டிவியில் கலக்கிக் கொண்டிருக்கிறார்)

6.Origin of Life,Evolution of Man சொல்லிக்கொடுத்த ஆசிரியர்,ஒரு நாள் மாணவர்களுக்கு கைரேகை ஜோசியம் பார்த்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.அது விளையாட்டாக செய்தது என்றாலும் கூட.கல்வியின் லட்சியம் படித்து பட்டம் பெற்று ஒரு வேலையில் சேர்வது என்ற அளவில் தான் அவருக்கு இருந்தது.கல்வியின் மேல் ஒருவித அலட்சிய மனநிலை வருவதற்கு அது ஒரு காரணமாக அமைந்தது.

7.ரொம்ப நாளாக ஒரு யானையை கட்டி தீனி போட்டுக் கொண்டிருந்தேன்.அதாவது ஒரு புல்லட் பைக் வைத்திருந்தேன்.புல்லட் ஓட்டுவதில் ஒரு வசதி போலீசார் தொல்லையிலிருந்து ஓரளவிற்கு தப்பிக்கலாம்.கிட்டத்தட்ட 11 வருடங்களாக ஓட்டியதில் இரண்டே முறை தான் போலீசார் நிறுத்தியுள்ளனர்.அது ஒரு பெருமை எனக்கு.ஒரு முறை இரண்டு நண்பர்களோடு மூன்று பேராக பயணம் செய்த போது பின்னால் இருந்த நண்பன் ,போலீசிடம் சிக்கினால் வீணாக பைன் கட்ட வேண்டுமே என்று புலம்பிக்கொண்டே வந்தான்.நானோ அதெல்லாம் யாரும் நிறுத்த மாட்டார்கள் என்று பந்தாவாக சொல்லி வாய் மூடுவதற்குள் எங்கிருந்தோ திடுமென முளைத்த ஒரு சார்ஜண்ட் வண்டியை நிறுத்தினார்.

வாயை வைக்காதே என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்.அதன் சக்தியை அன்று தான் அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்.

8.எங்கள் பாட்டி இறந்த அன்று நண்பர்கள் செய்த கலாட்டாவில் நான் துக்க வீடு என்பதையும் மறந்து சிரித்துக் கொண்டிருந்தேன்.என்னை நானே
நொந்து கொள்ளும் விசயம் இது.சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் முகத்தை வைத்துக்
கொள்ளும் கலையில் நானொரு கத்துக்குட்டி.

நான் அழைக்கும் பதிவர்கள்.
1.பூக்குட்டி
2.உடன்பிறப்பு
3.பகுத்தறிவு
4.selva
5.முத்து தமிழினி
6.neo
7.மிதக்கும்வெளி
8.வரவணையான்

6 comments:

said...

நான் அழைத்தவர்களில் முதலில் களம் இறங்கியமைக்கு மிக்க நன்றி.

//பொதுவான விசயங்களை பேசும் ஆசிரியர்கள் வெகு சிலரே..// ஓ! அந்தமாதிரி ஆசிரியர்களை உங்களுக்குப் பிடிக்குமா? நல்லதுதான்.

//11 வருடங்களாக ஓட்டியதில் இரண்டே முறை தான் போலீசார் நிறுத்தியுள்ளனர்//
என்னையும் இதுவரை இருமுறைதான் நிறுத்தியுள்ளனர். ஆனால் 37 ஆண்டுகளில் ..!

said...

//ஓ! அந்தமாதிரி ஆசிரியர்களை உங்களுக்குப் பிடிக்குமா? நல்லதுதான்.//

ஆமாம் தருமி அய்யா.நானும் விலங்கியல் மாணவன் தான்.அமெரிக்கன் கல்லூரியில் இடம் கிடைக்காதது என்னுடைய துரதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

said...

படிக்க சுவாரசியமாக இருந்தது ஜாலிஜம்பர். ஆமாம், இந்த எட்டில் selva என்பது நானில்லை அல்லவா:)) ஒருவேளை அப்படியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன், இப்போது எதுவும் எழுத நேரப்பற்றாக்குறையும், சோம்பலும்.

said...

நன்றி செல்வநாயகி.இந்த selva வேறு ஒருவர்.kalaingarkarunanidhi தளத்தில் எழுதுகிறார்.

said...

அருமையான எட்டு ஜாலிஜம்பர்!

5வது எட்டை ரொம்பவும் ரசித்தேன் :-)

said...

நன்றி லக்கி.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்