கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Friday, June 15, 2007

இவர் யார் என்று தெரிகிறதா?

நடிகர் சந்திரசூரியன் கர்நாடகத்தில் பிறந்தவர்.ஏழு வயதிலேயே நாடக நடிகராக தமிழகத்தில் குடியேறியவர்.

பாய்ஸ் கம்பெனியில் கிருஷ்ணன் வேஷம் போட்டால் பார்க்க வந்திருப்பவர்கள் எல்லாம் கையெடுத்து கும்பிடுவார்கள்.

ஏழைத்தாய்க்கு மகனாகப் பிறந்த அவர், ஏழு வயதிலிருந்தே தான் சம்பாதித்து தாயைக் காப்பாற்ற வேண்டியவராக இருந்தார்.

அந்நாளில் நாடகங்கள் இரவு ஒன்பது மணி வரை நடக்கும்.

நடிக்கின்ற பையன்கள் படிக்கின்ற படிப்பே நாடக வசனம் தான்.
மாதம்பூராவும் கத்தி முடித்த பிறகு கையில் கிடைக்கும் சம்பளம் ஐந்து ரூபாய்.

அளந்து போடும் சாப்பாடு .அதற்கு மேல் கிடையாது.சந்திரசூரியன் போடாத வேஷம் இல்லை.

தர்மன் வேஷமும் போட்டிருக்கிறார்,துரியோதனன் வேஷமும் போட்டிருக்கிறார்.

ஆகவே இரட்டை வேஷம் போடுவதென்பது அவர் பின்னாளில் கற்றுக்கொண்டதல்ல;வளரும் போதே விழுந்த உரம்.

நாடகத்தில் இருந்து அவர் சினிமாவுக்கு தாவிய போது படத்துக்கு நானூறு ரூபாய் என்று தான் வாழ்க்கை ஆரம்பமாயிற்று.

அப்போது முண்டி முண்டிப் பார்த்தும் வாழ்க்கையில் முன்னேறமுடியவில்லை.

கையிலே ஜெபமாலை கழுத்திலே உத்திராட்ச மாலை,நெற்றியில் விபூதி,குங்குமம்,இளம் பருவத்து பக்தகோடியாக அவர் காட்சியளித்தார்.

அப்போதும் மாதரர் ஆசை அவரை மயக்கி இழுக்கும்;மனசு பயந்து கைகள் நடுங்கும்.

ஆள் அழகாக இர்ந்தாலும் அந்நாளில் அவரை விரும்பிய பெண்கள் அதிகமாக இல்லை.

முகத்திலே பாவம் வராவிட்டாலும் நடிப்பிலே ஒரு துடிதுடிப்பிருக்கும்.

இருந்தும் பயன் என்ன?

தொழிலில் முன்னேற முடியவில்லை.

அவர் சங்கீதக் களஞ்சியமாக இருந்தால் அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும்.

இணை இல்லாத நடிப்புத்திறன் இருந்தால் ஏதாவது ஒரு கூட்டம் சேர்ந்திருக்கும்.

இரண்டும் இல்லாத காரணத்தால் தனக்கென்று ஒரு கூட்டத்தை அவரே தேடிப்பிடிக்க விரும்பினார்.

தான் பேசும் கூட்டத்துக்கு ஆள் வராவிட்டால்,ஆள் இருக்கும் மேடையைப் போட்டுக்கொள்ளும் அரசியல்வாதிகளை அவர் கூர்ந்து கவனித்தார்.

ஏதாவது ஒரு முத்திரையைப் போட்டுக்கொண்டால் தான் தன் எதிர்காலம் பத்திரமாக இருக்கும் என்று நம்பினார்.

அன்னை பராசக்தியின் அருளால் அவருக்கு அரசியலில் சில நண்பர்கள் கிடைத்தார்கள்.

கிடைத்த நண்பர்களோ இங்கர்சாலின் மாப்பிள்ளைகள்,காரல் மார்க்ஸின் பேரப்பிள்ளைகள்.

நடிகர் சந்திரசூரியனோ சிறந்த பக்திமான்.

தத்துவரீதியாக அவர்கள் உறவு ஒத்துவராது.

இவருக்காக தங்கள் கொள்கையை அவர்கள் விட்டுவிட முடியுமா?

ஆகவே அவர்களுக்காக இவர் தனது பக்தியைக் கைவிட்டார்.

கையில் இருந்து ஜெபமாலை நழுவிற்று;புரிகிறதோ இல்லையோ காரல்மார்க்ஸின் புத்தகம் குடியேறியது.

தானும் அரசியல்வாதி தான் என்று மேடையேறினார்;பேச ஆரம்பித்தார்.

அவர் எப்போது பேச ஆரம்பித்தாலும் "மனிதன் ஏன் பிறக்கிறான்?"என்று தான் ஆரம்பிப்பார்.

பெரிய விஷயங்களை சொல்லப் போகிறார் என்று ஜனங்கள் எதிர்பார்க்கும் போது "உலகத்திலேயே நான்தான் யோக்கியன்" என்று முடிப்பார்.

படத்திலே அவர் வில்லன் வேஷம் போட்டாலும் நல்லவனாகத் தான் நடிப்பார்.அரசியலிலே நல்லவனாகத் தோற்றமளித்தாலும் வில்லனாகத்தான் இருப்பார்.அரசியல் மூலம் சினிமாவுக்கு கூட்டம் சேர்ப்பது.சினிமா மூலம் அரசியல் லாபம் தேடுவது இரண்டிலும் அவர் வல்லவர்.

ஒரு சமயம் அவர் கட்சிக்காரர்கள் நம் படத்தை பார்ப்பதை விட, கட்சிக்குள்ளேயே நமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கினால் என்ன என்று யோசித்தார்.

ஆட்களைப் பிடித்தார்,போர்டுகள் எழுதுவதற்கு ஆர்டர்கள் கொடுத்தார்,தன் பெயரில் வீரபராக்கிரம சங்கங்கள் பலவற்றை ஆரம்பித்து விட்டார்.

ஒவ்வொரு படமும் வெளிவரும் போது தானே டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்து சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கொடுத்து விடுவார்.

மற்ற நடிகர்களின் படமாக இருந்தால் அதைக் கேலி செய்வதற்கும்,வெளியே வரும் போது 'படம் மட்டம்' என்று சொல்வதற்கும் தானே டிக்கெட் வாங்கி கொடுத்து விடுவார். தன்படமாக இருந்தால் கைதட்டி விசில் அடிப்பதற்கும்,'படம் பிரமாதம்' என்று சொல்வதற்கும் ஆள் அனுப்புவார்.

அவரது சேனை வீரர்கள் அதிகமாகக் கையாளும் ஆயுதம் சாணம்.

எதிரிகளின் போஸ்டர்களைக் குறிவைத்து சாணி அடிப்பதில் அவர்களுக்கு ஈடு இணை கிடையாது.

இந்திய ஜனநாயகத்தில் எந்தத்தகுதியும் இல்லாமல் யாரும் எந்தப் பதவியையும் அடைய முடியும்.

ஜனநாயகம் கொடுத்த அந்தச் சலுகையை யோக்கியர்கள் பயன்படுத்திக் கொண்டதை விட அயோக்கியர்கள் பயன்படுத்திக் கொண்டதே அதிகம்.

நடிகர் சந்திரசூரியன் அயோக்கியரல்ல.கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் ராஜதந்திரத்தில் வல்லவர்.

சொல்லப்போனால் சந்தர்ப்பங்களை பயன்படுத்துவதில் மட்டுமல்லாது,சில நேரங்களில் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வதிலும் அவர் கெட்டிக்காரர்.

பத்து வருஷம் ஜெயிலுக்குப் போன தியாகிகளை ஏறி மிதித்துக் கொண்டு , மக்கள் சந்திரசூரியனை தொட்டுப்பார்க்க விரும்புவார்கள் , என்றால் அது ஒன்றும் சாதாரணத் திறமையில்லையே.

'மக்கள் முட்டாள்கள்' என்று ஒரு வரியில் சொல்லிவிடுவது சுலபம்.ஆனால் பல லட்சம் மக்களை முட்டாள்கள் ஆக்குகிற சக்தி ஒருவனுக்கு இருக்கிறது என்றால் , அதை வியப்போடு பார்த்து பாரட்ட வேண்டியது முக்கியம் அல்லவா!

ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால் ஐம்பது ரூபாயாவது தர்மம் செய்வார்.

ஆனால் அந்த ஐம்பது ரூபாய் தர்மத்திற்கு ஐயாயிரம் ரூபாய் விளம்பரம் கிடைக்கிறதா என்று பார்த்து தான் செய்வார்.

அவரது குணாதிசயங்கள் விசித்திரமானவை.

தன்னை விட்டு விலகி நிற்பவனைக் கட்டியணத்துப் பக்கத்தில் கொண்டு வந்து விடுவார்.

அவன் பக்கத்தில் வந்ததும் எட்டி உதைத்து அவமானப்படுத்தி விடுவார்.

பி.கு:
கண்ணதாசனின் "அரங்கமும்,அந்தரங்கமும்" புத்தகத்தில் இருந்து இங்கே சில பக்கங்களை பதிந்துள்ளேன்.

4 comments:

Anonymous said...

நீ உருப்பட மாட்ட.

said...

//நீ உருப்பட மாட்ட. //

பின்னூட்டக் கயமை?

நன்றி அனானியண்ணே.

Anonymous said...

வெள்ளை எம்ஜிஆர் போட்ட போடையே தாங்க முடியவில்லை.இந்த லட்சணத்துல கருப்பு எம்ஜிஆர் வேற வந்துட்டாரு.கடவுளே காப்பாத்து.

Anonymous said...

தல , இது அந்தக் காலத்துக்கு மட்டுமல்ல இந்தக் காலத்துக்கும் பொருந்துவதாக உள்ளது.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்