கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Sunday, June 3, 2007

வாலியின் வார்த்தை ஜாலம்

டிசம்பர் 2000 இல் நடந்த ஒரு விழாவில் வாலியால் வழங்கப்பட்ட கவிதை இது.நான் மிகவும் ரசித்த இக்கவிதையை தானைத்தலைவனின் பிறந்த நாளான இன்று வலைப்பதிவில் ஏற்றி மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றேன்.


நான்
காதலாகி
கசிந்து கண்ணீர் மல்கி
கைகூப்பித் தொழும்;தமிழ்க்
கடவுளெனக் கண்முன் எழும்...


மாண்புக்கெல்லாம் மாண்பான
மாண்பமைந்த முதல்வா!
அற்றை நாளில்-ஓர்
ஆண்மகவு வேண்டுமென்று
பெற்றோர் நோன்பிருந்து
பெற்றெடுத்த புதல்வா!


நூற்கடல் முத்துவேலர்-ஒரு
நொடிக்கு நொடி நேசித்த
பாற்கடல் அஞ்சுகத்தன்னை
பயந்தநல் அமுதமே!


மடமையில் உறங்கும்-இந்த
மண்விழிக்க வேண்டி-ஒரு
கற்பரசி மடிக்குளத்தில்
கண்விழித்த குமுதமே!


சிறு
மகவு அனையதொரு
மனம் படைத்தோய்!உன்
தகவு அடங்குமோ-என்
தமிழுக்குள்?பசிபிக்
சமுத்திரம் அடங்குமோ-சின்ன
சிமிழுக்குள்?


என்னிடத்தில்
ஏது-உன்
சீர்த்தியைச்சுட்ட-ஒரு
சொற்குறி?


உன்
விஷயத்தில்
தலைவா!நானொரு
தற்குறி!


கறுப்பு சிவப்பு
கரைகொண்ட வேட்டியை
உடுத்தி நடக்கும்
உதயசூரியனே!
முரசொலியில் நீ வரையும்
மடல்படித்து-உன்னுள்
இடம்பிடிக்கும் உடன்பிறப்புக்களின்
இதயசூரியனே!


ஞான
ஞாயிறே!
உனக்குஉண்டு சுத்தமனம்;
உனக்குஉண்டு ஒத்தமனம்;
உனக்குஉண்டு யுத்தமனம்;
உனக்குஇல்லை அத்தமனம்!


பேசரிய பீடுடைய
பெருந்தகையே!
கூலிங்கிளாஸ் அணிந்த
குறுந்தொகையே!


அணுவளவும் குறையாது-உன்
ஆரோக்கியம்!முன்னம்
அரசாண்டவர்களில்-உன்னைவிட
ஆர்யோக்கியம்?


சிலர்
வாழ்ந்த வாழ்வை-அவர்களது
வண்டவாளம் சொல்லும்;உன்
தியாகவாழ்வை-கல்லக்குடி
தண்டவாளம் சொல்லும்!


நிச்சயம்-நீ
நூறாண்டு வாழ்வாய்!
ஆம்!
அது...


தீர்க்கசுமங்கலியாம்
தயாளுஅம்மாளின்
தாலிபாக்கியம்;அதுவே இந்த
வாலி பாக்கியம்!


ஊராளும்
உத்தமனே!
உன்பெயர் சொல்லி-தன்
உச்சந்தலையில்-தினம்
பூசாத்திமகிழும்-பெண்ணரசி
ராசாத்தி துணைவா-இரு
நங்கையர் திலகங்களுக்கும்-நீ
நெடுங்காலம் துணைவா!


சிம்மாசனத்திலும்;தமிழ்ச்
சனத்தின் மனத்திலும்...
கொலுவமர்ந்து-செங்
கோலோச்சும் தலைவா!
உனக்கும் சோம்பலுக்கும்
ஓராயிரம் கல் தொலைவா?


வேலையில் மூழ்கிவிட்டால்-உன்
விழிகள் தூங்கா;
நாட்டவர்நலத்தை-உன்
நினைப்புகள் நீங்கா;உன்
கோட்டை மேசையில்
கோப்புகள் தேங்கா;உன்னால்
ஆனதய்யா-தமிழ் பூமி
அமைதிப்பூங்கா!


நீ
'ஏ.எம்' முதல்
'பி.எம்' வரை
சலிக்காது உழைக்கும்
'சி.எம்'.


நீ தேசுமிகு-தமிழ்த்
தேயம்-தனைக்காக்கச்
சிலிர்த்து நிற்கும்
சீயம்!


முத்தமிழ் வித்தகமே!கால்கள்
முளைத்து நடக்கும் முப்பால் புத்தகமே!
நீ
நாடாளுகின்றாய்
நான்காம் தடவை
உன்னை இனி
வெல்லுமோ புடவை!


நிச்சயம்
நாளைய தேர்தல்-இந்த
நான்கை ஆக்கும் ஐந்தா!நீயே தான்
அடுத்த முதல்வன்
அஞ்சுகம் மைந்தா


தலைமுறை
தலைமுறையாய்த்
தலைவனாயிருந்தும்
தலைகனக்காத விந்தையே-மாநகரத்
தந்தையின் தந்தையே
உன்னால் தான் உண்டானது
உழவர் சந்தையே;இனி
உழவர் பெருமக்கள்-
உடுக்கமாட்டார் கந்தையே!


சதா
சர்வகாலமும்
மக்கள் பக்கம் தான்
மன்னா!உன் சிந்தையே
என்ன செய்யும்?
ஏது செய்யும்?
வசவாளர்கள் உன்மேல்
வீசுகின்ற நிந்தையே!


சிலர்
வாய்புளிக்கச் சொல்லுவார்
'வந்தபின் பார்ப்போம்' என்று;
வள்ளலே!நீ தான் சொன்னாய்
'வருமுன் காப்போம்' என்று!


சாதிக்கும் சாதிக்கும்
சண்டைகள் வராமல்
சாதிக்கும்-நீ கட்டிய
சமத்துவபுரங்கள்;அவை
வன்பகை தீர மன்பதைக்கு-நீ
வழங்கிய வரங்கள்


இனி
இங்கு
கூன்பிறையும் கோதண்டமும்
கைகுலுக்கும்;
சிலுவையும் அவற்றை
சினேகிக்கும்!


ஏசுதேவனும்,
வாசுதேவனும் கூடுவர்;இது காறும்
'டூ' விட்டிருந்தவர்
டூயட் பாடுவர்!


நாடாளும்
நல்லவனே
நீ
சாதித்திருக்கிறாய்
சமயப்பொதுமறை;
இது சாதரணமானதல்ல
இமயப்பொறை!


அன்பின் மேன்மை
அறிந்தவன் நீ;
'அன்பின் வழியது உயிர்நிலை!' என
அய்யன் வள்ளுவன்-
செப்பிய ஞானம்-
செறிந்தவன் நீ!


மாண்புமிகு மாறனின்
மற்றொரு தாயே! உன்
அன்பினாலன்றோ தீர்ந்தது
அன்னவன் நோயே.


'அக்கா மகன்' என்ற அளவிலா
அன்பு காட்டினாய்?நீயே பெற்ற
பக்காமகன் என்று அல்லவோ
பாசம் ஊட்டினாய்!


அந்நாளில்-உன்னை
அனேகம் பேர் அழைப்பர்-உன்
முழுப்பெயர் சொல்லாமல்-
'மு.க,,மு.க' என்று.
பிறகு தான் எனக்குப்
புரிந்தது-நீ
முத்தமிழர் மூச்சுவாங்கும்
மூக்காயிருக்கிறாய் என்று!


இனிய தலைவனே!நீ
இன விடுதலைக்காக...
உண்ணாவிரதம் நோற்காமல்
அண்ணாவிரதம் நோற்றவன்;
அண்ணாவின் நாமத்தை-உன்
உண்ணாவில் ஏற்றவன்!


அதனால் தான்
அய்யா!நீ...
அண்ணனுக்குப் பின்
அண்ணனானாய்..அந்த
மன்னனுக்குப்பின்
மன்னனானாய்!


உன்னைப் பற்றி..நான்
ஓர்ந்ததைச் சொல்வேன்...
நீ
தடியில்லாத பெரியார்;
பொடியில்லாத அண்ணா..அவ்
இருவரும் உன்வடிவில்
இருக்கின்றார் ஒன்ணா!


நீ
வாலறிவன்;உன்னில் நான்
காலறிவன்
எனினும் என்
எழுத்துக்களை ஏற்று
'நன்று!நன்று'
எனக்களித்தாய்;இன்று
நல்விருதும்
எனக்களித்தாய்!


பெரியவனே!நீயெனைப்
பெரும்புகழ் என்னும்...
தொட்டிலில் போட்டுத்
தாலாட்டும் தாயானாய்;நான்
வாழ்நாளெல்லாம் நன்றியோடு
வாலாட்டும் நாயானேன்
.

8 comments:

Anonymous said...

நல்ல நகைச்சுவை விருந்து.

said...

அழுது கொண்டே சிரிக்கும் அனானி,வருகைக்கு நன்றி.

said...

வாலி அவர்கள் இந்த கவிதையை வாசித்த தினத்தன்று கவிக்கோவும் தன் பங்குக்கு அருமையான கவிதை வாசித்தார். அன்று அரசியலில் சூடாக இருந்த சம்பவம், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நடந்த உலக தமிழ் மாநாட்டிற்கு கலைஞர் அவர்க்களுக்கு அழைப்பிதழில் 'முன்னாள் எம். எல். ஏ' என்று எழுதி அனுப்பப்பட்டது. அதற்கு பதிலாக கலைஞர் அவர்களும் பதில் அனுப்பும் போது 'முன்னாள் நடிகை' என்று நல்லவிதமாக நன்றி தெரிவித்தார். இதை வைத்து கவிக்கோ அவர்கள் நீ முன்னாள் தான் தமிழ் என்றால் நீ முன்னால் தான் என்று வார்த்தையில் சுவை பட விளையாடியது தமிழ் விருந்தாக அமைந்தது - நாகூர் இஸ்மாயில்

said...

ஆகா,இஸ்மாயில் பாய் அருமையான ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

said...

மிக அருமையான கவிதை...
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி............

said...

அருள், வருகைக்கு நன்றி.

said...

வாலியின் கலைஞருக்கான லாலி அருமை !

said...

கோவியாரே,இக்கவிதை வாலியின் கலைஞர் காவியத்தில் இடம்பெற்றுள்ளது.கலைஞர் காவியம் ஒலிவடிவிலும் கிடைக்கிறது.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்