கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Saturday, January 10, 2009

புத்தாண்டின் புத்தம்புது முடிவு

தருமி அய்யா சாலியாக ஒரு பதிவு இட்டுள்ளார் , அதன் தொடர்ச்சியாக இந்தப்பதிவு.2008ன் இறுதி நாளில் நடந்த வலைப்பதிவர் மாநாட்டில் நான்,தருமி அய்யா,சீனா அய்யா, டிபிசிடி, மற்றும் சோலைஅழகுபுரம் பாலா ஆகியோர் கலந்து கொண்டோம். பிரபு ராஜதுரை அவர்களை ஆட்கொணர்வு மனு போட்டு தான் அடுத்தமுறை வரவைக்க வேண்டும்.மண்டல் கமிசன் பற்றி பேச்சு வந்த போது சந்திரமுகி சோதிகா மாதிரி திடீரென்று மாறிவிட்டேன்.இயக்குனர் சங்கரின் சென்டில்மேன் படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது பாதியிலேயே எழுந்து வந்ததையும்,அதன் பி்றகு அவருடைய படங்களை திரையரங்குகளில் பார்ப்பதை புறக்கணிப்பதையும் ஆவேசமாக கூறினேன்.(இந்தியன் மட்டும் கமலுக்காக பார்த்தேன்). மண்டல் கமிசனால் பலனேதும் இல்லாத சீனா அய்யா என்ன நினைப்பாரோ என்று சங்கடமாக இருந்தது. அப்பொழுதே உங்களுக்கு அவ்வளவு அறிவு இருந்ததா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்திய டிபிசிடி , அப்போது தான் பத்தாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தார்.

பங்காருஅடிகளாரின் மகன் மதுரைக்கு வந்த போது தங்கள் வீட்டில் தங்கிய சம்பவத்தை சிறிது விளக்கினார் டிபிசிடி.அவருக்காக மற்றவர்கள் சைவச்சாப்பாடு உண்டதையும், அவர் குழுவினர் தனியறையில் அசைவ உணவை ஒரு கட்டு கட்டியதையும் கட்டுடைத்தார்.தன் காலில் விழுந்து ஆசி வாங்கியவர்களை அவர் சக்தி என்று அழைத்ததையும், காலில் விழாத தன்னை பிரதர் என்று அழைத்ததையும் சொல்லி கிச்சுகிச்சு மூட்டினார்.

லக்கி,கைப்புள்ள,சொள்ளுப்பாண்டி போன்றவர்களின் ஒட்டுமொத்தக்கலவையாக வருவார் என்று கட்டியங்கூறும் எழுத்துக்குச் சொந்தக்காரர் சோலைஅழகுபுரம் பாலா.பொறியாளராக பிஎசுஎன்எல்லில் பணியாற்றுகிறார்.

மாநாடு முடியும் நேரத்தில் பேச்சு சூடு பிடித்தது.தமிழ்க்கொலை புரிவதில் தவறேதுமில்லை என்னும் திடநம்பிக்கையுடன் எழுதும் போக்கைப்பற்றிய பேச்சு வந்தது.அதிர்ட்டப்பதிவரின் சமட்கிருதப்பாணி பெயரைப்பற்றியும் பேசப்பட்டது.கிரந்த எழுத்துக்களை பயன்படு்த்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற டிபிசிடியின் வாதத்தை மறுத்தார் தருமி அய்யா. ஜார்ஜ் என்ற தன்னுடைய பெயரை சார்சு என்றா கூற வேண்டும் என்று சொல்லி வெறுத்துப்போனார். ஏற்கெனவே வலைப்பதிவில் இந்த பெயர் விசயத்தில் ஜெயபாரதன் அய்யாவிற்கும்,நயனம் அய்யாவிற்கும் இடையே நடந்த பிரசித்தி பெற்ற சண்டை ஒன்று உள்ளது நினைவுக்கு வந்தது.பிறமொழிச்சொற்களை ஏற்றுக்கொண்டால் தானே தமிழ் வளரும் என்பது தருமி அய்யாவின் வாதம். பிறமொழிச்சொற்களை ஏற்றுக்கொள்வது வேறு பிறமொழி எழுத்துக்களை பயன்படுத்துவது வேறு என்று நான் சொன்னேன். இந்த இடத்தில் நன்னன் அய்யாவை துணைக்கு அழைத்துக்கொண்டேன்.அவரிடம் ஒருவர், 'தமிழ் என்பதை ஆங்கிலத்தில் tamil என எழுதுகிறார்களே இது சரியா?' என்று கேட்டார். அதற்கு நன்னன் அய்யா மிகவும் சரியானது தான்., அந்த மொழியில் பொருத்தமான ஒலியமைப்பு உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்துவதில் தவறேதுமில்லை.அதைப்போலவே தமிழிலும் பிறமொழிச்சொற்களை பயன்படுத்தும் போது தமிழில் உள்ள எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்துவது தான் சிறப்பு என்றும் கூறினார்.கிட்டத்தட்ட பேச்சு நிறைவடைந்து கிளம்பி விட்டோம்.

தருமி அய்யாவுக்கு இருக்கும் அதே பிரச்சினை எனக்கும் இருக்கிறது.என் மகள் ஜென்னியின் பெயரை தமிழில் எப்படி எழுதுவது என்று நீண்ட நாளாக குழம்பிக்கொண்டிருந்தேன்.மொழி என்பது ஒரு கருவி தானே ஒழிய உணர்வு ரீதியாக பொருட்படுத்தத்தேவையில்லை என்பது பகுத்தறிவாளர் பார்வை, தருமி அய்யாவின் பார்வை இத்தகையது என்று தான் நான் நினைக்கிறேன்.எனக்கும் இவ்வாறான எண்ணமே இருந்தது.ஆனாலும் ஆழ்ந்து யோசிக்கும் போது மொழியின் இசைவுக்கு மாறான எழுத்துக்களை பயன்படுத்துவது, மொழியைக் கறைப்படுத்துவதாகவே எனக்குத்தெரிகிறது.ஜீசஸை யேசு என்பதும், க்ரைஸ்ட்டை கிறிஸ்து என்பதும்,ஷங்கராச்சார்யாவை சங்கரச்சாரியார் என்பதும் தான் நம் மொழியின் இசை.ஜென்னியை தமிழில் எழுதும் போது சென்னி என எழுத இனி தயக்கமேதும் இல்லை.இப்படி ஒரு முடிவை துணிந்து(!) எடுக்கத்தூண்டுதலாயிருந்த டிபிசிடிக்கு நன்றி.

சார் என்பதை ஸார் என்று எழுதும் உண்மைத்தமிழன் போன்றவர்கள் இந்தப்பதிவைப்படித்தால் கைகொட்டிச்சிரிப்பது உறுதி.

பி.கு:
மெய்யாலுமே கடைசி வரியை எழுதியவுடன் தருமி அய்யாவின் பதிவு முகவரியை தெரிந்துகொள்ள அங்கு சென்றால் , பின்னூட்டத்தில் உ.தமிழன் அங்கலாய்த்திருக்கிறார்.கொடுமையோ கொடுமை.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்